×

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு கவுதம சிகாமணி எம்பி ஆஜராகாததால் குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுசெய்ய இருந்த நிலையில் கவுதம சிகாமணி எம்.பி ஆஜராகாததால், வழக்கின் விசாரணையை ஜனவரி 24க்கு சென்னை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. 2006-2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை பதிவுசெய்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் முக்கிய ஆவணங்களும், ரூ.13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.

இந்தச் சூழ்நிலையில், சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம சிகாமணி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ் பிசினஸ் ஹவுஸ் நிறுவனம் ஆகிய ஆறு பேருக்கு எதிராக அமலாக்கத் துறை ஆகஸ்ட் மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த நவம்பர் 24ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, கவுதம சிகாமணி தவிர மற்றவர்கள் ஆஜராகினர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ராஜ மகேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை, தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஆவணங்களில் ஒரு சில பக்கங்களில் உள்ள விவரங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும், அதுகுறித்து அமலாக்கத்துறை தெளிவுபடுத்த வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு கவுதம சிகாமணி எம்பி ஆஜராகாததால் குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Gautama Chikamani ,Chennai Sessions Court ,Chennai ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் இன்று விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு